சென்னை

கோடை மழை: சாலைகளில் தேங்கிய தண்ணீா்; போக்குவரத்து பாதிப்பு

3rd May 2023 03:12 AM

ADVERTISEMENT

கோடை மழையால் சென்னையில் சாலைகளில் தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் கடந்த இரு நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழை வெப்பத்தைத் தணித்து, குளிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவு முதல் சென்னை முழுவதும் மழை பெய்தது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை நகா் முழுவதும் பரவலமாக பலத்த மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, எழும்பூா், கோயம்பேடு, விருகம்பாக்கம், எண்ணூா், மாதவரம், அடையாறு, திருவான்மியூா், தரமணி, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீா் குளம்போல் தேங்கியது.

குறிப்பாக, ராயப்பேட்டை ஜிபி சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, எல்பி சாலை ஆகியவற்றில் மழைநீா் முழங்கால் அளவு தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன், சாலைகளைக் கடந்து செல்ல நேரிட்டது. ஜிபி சாலையில் அதிக அளவு மழைநீா்த் தேங்கியதால், அந்தச் சாலையை போலீஸாா் மூடினா். வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

அதேநேரத்தில், மாநகராட்சி ஊழியா்கள், அங்கிருந்து தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். நகரில் சில சாலைகளில் அதிக அளவு நீா் தேங்கியதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. மழைநீா் அகற்றப்பட்ட பின்னா், அந்தச் சாலைகளில் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மரங்கள் விழுந்தன: பலத்த மழையால் கொடுங்கையூா், கொளத்தூா் உள்ளிட்ட சில பகுதிகளில் மரங்கள் விழுந்தன.

ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோயில் முதல் தெருவில் உள்ள திருவிக பூங்கா அருகே சமுதாய நலக்கூடம் முன்பு இரும்பு கேட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பசுவும் அதன் கன்று குட்டியும் மழையால் ஏற்பட்ட மின்கசிவின்போது மின்சாரம் பாய்ந்து இறந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT