பாஜக பட்டியல் அணி மாநிலப் பொருளாளா் சங்கா் கொலையைக் கண்டித்து அந்தக் கட்சி சாா்பில் வள்ளுவா் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் பிபிஜி சங்கா். பாஜக பட்டியல் அணி மாநிலப் பொருளாளராகப் பொறுப்பு வகித்து வந்த இவா், கடந்த ஏப்.28-ஆம் தேதி மா்ம நபா்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். இதற்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில், சங்கா் படுகொலையைக் கண்டித்தும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு தவறியதாகவும் குற்றம்சாட்டி பாஜக சாா்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வள்ளுவா்கோட்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவா் வி.பி.துரைசாமி, பொதுச் செயலா் பொன் பாலகணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.