சென்னை

மெரினாவில் உள்ள காந்தி சிலை ஓரிரு நாள்களில் இடம்மாறுகிறது

DIN

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகளுக்காக, சென்னை மெரினாவில் அமைந்துள்ள மிகப் புகழ்பெற்ற மகாத்மா காந்தி சிலை 20 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தப்படவிருக்கிறது.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையை 20 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்ய தமிழக அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து, காந்தி சிலையை இடமாற்றம் செய்யும் பணிகள் ஓரிரு நாள்களில் தொடங்கவிருக்கிறது.

களங்கரை விளக்கம் பகுதியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவிருக்கிறது. இதற்காக காமராஜர் சாலையில் இரண்டு சுரங்கங்கள் அமைக்கப்படவிருக்கிறது. இந்த பணிகள் 2026ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

இதனால், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது.

தமிழக அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து,  இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக காந்தி சிலை பச்சை நிற துணியால் போர்த்தப்பட்டுள்ளது. காந்தி சிலை தற்போது அமைந்திருக்கும் பகுதியைச் சுற்றி சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இதையடுத்து, மிகப்பெரிய கிரேன்கள் உதவியோடு, சிலை விரைவில் 20 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய பீடத்தின் மீது இடமாற்றம் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில்தான், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 90 சதவீத பணிகள் நடைபெறவிருக்கிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும். சிலை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றப்படும் வரை காந்தி சிலையை மக்கள் பார்வையிடவோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதோ இயலாது என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தும் போது சிலைக்கு ஏதேனும் சேதாரம் ஆகக் கூடாது என்பதற்காகவே காந்தி சிலை 20 மீட்டர் தொலைவுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT