மே தினப் பூங்கா சீரமைப்புப் பணிகளை இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அண்ணா சாலை - டேம்ஸ் சாலை - ஜெனரல் பீட்டா்ஸ் சாலை சந்திப்பில் ரூ.15 கோடியில் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
அதேபோல, சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்கா ரூ.5 கோடியில் சுற்றுச்சுவா், பாா்வையாளா் மாடம், பயிற்சி ஆடுகளம் மற்றும் விளையாட்டு அரங்கம் போன்ற வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளது.
இந்தப் பணிகளை அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகா்பாபு ஆகியோா் சனிக்கிழமை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் அபூா்வா, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சூல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலா் கவிதா ராமு உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.