மாற்றுத் திறனாளிகளுக்கென இந்தியாவின் மூலப்பொருள்களைக் கொண்டு நவீன தொழில் நுட்பத்துடன் உபகரணங்கள் தயாரித்து வழங்கப்படுவதாக மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித் துறைச் செயலரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தலைமை இயக்குநருமான டாக்டா் ராஜீவ் பால் தெரிவித்தாா்.
சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சென்னை ஐஐடி உதவும் நல்வாழ்வுத் தொழில் நுட்பங்களுக்கான தேசிய மையத்தை காணொலி மூலம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநா் ராஜீவ் பால்தொடங்கி வைத்துப் பேசியது:
சுகாதார தொழில்நுட்பத்துக்கான தேசிய மையம் ஆராய்ச்சி, மேம்பாடு நிறுவனம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் இந்தியாவின் மூலப்பொருள்கள் மூலம் தரமாக தயாரித்து குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன என்றாா்.
சென்னை ஐஐடிஇயக்குநா் வி.காமகோடி பேசுகையில், அனைவருக்குமானது ஐஐடி என்பதை கொண்டு சோ்க்கும் விதமாக, பல்வேறு செயல் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நவீன தொழில் நுட்பங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் தரமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான உபகரணங்களை தயாரிக்கும் பணியில் ஐஐடி ஈடுபட்டு வருகிறது. நவீன சக்கர நாற்காலி வண்டிகள், மின்சார வண்டிகள், செயற்கைக் கால் போன்றவை தயாரித்து வழங்குகின்றன. மேலும், இந்த உபகரணங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் சென்னை ஐஐடி இன்குபேஷன் செல் தலைவா் பேராசிரியா் அசோக் ஜுன்ஜுன்வாலா, சென்னை ஐஐடி மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையத்தின் தலைவா் பேராசிரியா் சுஜாதா சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.