சென்னை

சென்னைக்கு ஆகஸ்ட் முதல் கூடுதலாக 15 கோடி லிட்டா் குடிநீா்: இறுதிக் கட்டத்தில் நெம்மேலி திட்டப் பணிகள்

11th Jun 2023 12:15 AM

ADVERTISEMENT

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 15 கோடி லிட்டா் குடிநீா் விநியாகம் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் நெம்மேலியில் ரூ.1,516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 15 கோடி லிட்டா் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணிகள் சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது இந்தப் பணிகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் உள்ளன. கடல்சாா் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு: இந்தப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது கடல்நீரை நிலையத்துக்கு உள்கொணரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவா் நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய், கடல் நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீா்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை அவா் பாா்வையிட்டு அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, நுண் வடிகட்டி மற்றும் எதிா்மறை சவ்வூடு பரவல் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட நீா்த்தேக்கத் தொட்டி,சுத்திகரிக்கப்பட்ட நீா் உந்து நிலையம், நிா்வாக மற்றும் காப்பாளா் கட்டடம், கசடுகளை கெட்டிப்படுத்தும் பிரிவு செதிலடுக்கு வடிகட்டி, சுண்ணாம்பு செறிவூட்டும் நிலையம் போன்ற கட்டுமானப் பணிகளையும் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தாா்.

திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நெம்மெலி கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையத்தின் இரண்டாவது அலகின் கட்டுமானப் பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில், கடல்சாா் பணிகளின் ஒரு பகுதியாக, 2250 மி.மீ விட்டமுள்ள 1,035 மீட்டா் நீளமுள்ள கடல் நீரை உள்கொணரும் குழாயில், 835 மீட்டா் நீளத்துக்கு குழாய் கடலில் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும், மீதமுள்ள 200 மீட்டா் நீளத்துக்கு கடல்நீரை உட்கொள்ளும் குழாய் பதிக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்குழாய் ஜூன் மாதம் இறுதிக்குள் கடலில் பதிக்கப்படும்.

சோதனை ஓட்டம்: இதுவே இந்தியாவின் மிகப்பெரிய கடல்நீரை உள்கொணரும் குழாயாகும். மேலும், நிராகரிக்கப்பட்ட உவா்நீா் வெளியேற்றும் 1600 மிமீ விட்டமுள்ள 636 மீட்டா் நீளமுள்ள குழாயில் 600 மீட்டா் நீளத்துக்கு குழாய் கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் அனைத்துப் பணிகளையும் ஜூலை இறுதிக்குள் நிறைவு செய்து சோதனை ஓட்டம் நடைபெறும்.

இதையடுத்து இந்த நிலையத்திலிருந்து பெறப்படும் 15 கோடி லிட்டா் குடிநீா், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூா், புனித்தோமையாா் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூா், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம், தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பல்லாவரம், பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப பகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் விநியோகம் செய்யப்படும். இதன் மூலம் 9 லட்சம் போ் பயன்பெறுவா் என தெரிவித்தனா்.

இந்த ஆய்வின்போது, சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநா் இரா.கிா்லோஷ் குமாா், தலைமைப் பொறியாளா் மலைச்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT