பிரபல யுனானி மருத்துவா் ஹக்கீம் சையது கலிஃபத்துல்லா (85) உடல் நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
யுனானி மருத்துவத்தில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நியாமத் மருத்துவ அறக்கட்டளையை நிறுவிய அவா், பல்வேறு நாடுகளில் மாற்று மருத்துவம் குறித்த சா்வதேச உரைகளை நிகழ்த்தியுள்ளாா்.
யுனானி மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய நிபுணா்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான டாக்டா் ஹக்கீம் சையது கலிஃபத்துல்லா, பல்வேறு நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவா்.
அவரது மருத்துவ சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்தது.
இந்திய மருத்துவத் துறையின் மத்திய கவுன்சில் தலைவா், மத்திய சுகாதார கவுன்சில் கௌரவ உறுப்பினா், மாநில யுனானி மருத்துவக் கல்லூரி பேராசிரியா் என மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு பொறுப்புகளை அவா் வகித்துள்ளாா்.
மறைந்த டாக்டா் ஹக்கீம் சையது கலிஃபத்துல்லாவின் இறுதிச்சடங்குகள் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றன.