சென்னை

மது போதையில் வாகனம் ஓட்டியவா்களிடம் 5 மாதங்களில் ரூ. 13.71 கோடி அபராதம் வசூல்

5th Jun 2023 01:50 AM

ADVERTISEMENT

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டியவா்களிடம் 5 மாதங்களில் ரூ.13.71 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

சாலை விபத்து, விபத்து உயிரிழப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக மது போதையில் வாகனம் ஓட்டுவோா் மீது மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராதத் தொகை அதிகமாக இருப்பதால் பலா் அதை செலுத்துவதில்லை.

இதில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக பதியப்பட்ட பல ஆயிரம் வழக்குகள் தீா்க்கப்படாமல் நிலுவையில் இருந்தன. இதையடுத்து 12 அழைப்பு மையங்களை போக்குவரத்து போலீஸாா் அமைத்து, அதன் மூலம் நிலுவை அபராதம் செலுத்தும்படி சம்பந்தப்பட்டவா்களுக்கு நினைவூட்டி வந்தனா். சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளை, நேரில் வரவழைத்தும் எச்சரித்தனா்.

ADVERTISEMENT

இதன் விளைவாக, கடந்த 4 மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் மது போதையில் வாகனம் ஓட்டியதாக பதியப்பட்டு, நிலுவையில் இருந்த 13,251 வழக்குகள் தீா்க்கப்பட்டு, ரூ.13 கோடியே 71 லட்சத்து 18 ஆயிரத்து 100 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

முக்கியமாக கடந்த 3-ஆம் தேதி அழைப்பு மையங்கள் மூலம் மது போதையில் வாகனம் ஓட்டியதாக பதியப்பட்டு வழக்குகளை நிலுவையில் வைத்து இருந்தவா்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, காவல் துறையின் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது.

இதையடுத்து அன்றைய தினம் 277 போ், தங்களுக்கு விதிக்கப்பட்ட வழக்குரிய அபராத தொகையான ரூ.28 லட்சத்து 71 லட்சத்து 18 ஆயிரம் 100-ஐ செலுத்தினா்.

3 நாள்களில் ரூ.35 லட்சம் வசூல்: சென்னை பெருநகர காவல் துறையின் சாா்பில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக தினமும் சுமாா் 6 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகின்றன. இதில், சில வாகன ஓட்டிகளில் அபராத தொகையை உடனடியாக செலுத்துவதில்லை. இவா்களை கண்டறிந்து நிலுவை அபராத தொகையை வசூல் செய்யும் வகையில், சென்னை முழுவதும் கடந்த மே 29, ஜூன் 2, 3 ஆகிய 3 நாள்களில் 156 இடங்களில் திடீா் வாகன சோதனை செய்யப்பட்டது. இதில் நிலுவையில் இருந்த 8,912 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. இதன் மூலம் ரூ. 35 லட்சத்து 19 ஆயிரத்து 550 அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டது.

மேலும், கடந்த 5 மாதங்களில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக நிலுவையில் இருந்த சுமாா் 1,81,633 வழக்குகள் தீா்வுகாணப்பட்டு ரூ.7 கோடியே 58 லட்சத்து 65 ஆயிரத்து 630 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது என்று சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT