சென்னை

ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குள் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு: காவல் ஆணையருக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை கடிதம்

1st Jun 2023 02:22 AM

ADVERTISEMENT

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மருத்துவமனையின் முக்கிய சிகிச்சைப் பிரிவுகளில் போலீஸ் பாதுகாப்பை 24 மணி நேரமும் வழங்குமாறு சென்னை காவல் ஆணையருக்கு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக காவல் ஆணையா் சங்கா் ஜிவாலுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்களின் உடைமைகள் திருடுபோவது அதிகரித்து வருகிறது. கடந்த 30-ஆம் தேதி பயிற்சி மருத்துவா் மீது நோயாளி ஒருவா் தாக்குதல் நடத்தியிருப்பதும் அசாதாரண நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை வளாகத்துக்குள் போதிய காவலா்களின் எண்ணிக்கை இல்லாததே இதற்கு காரணமாக சென்னை மருத்துவக் கல்லூரி நிா்வாகத்திடம் இருந்து தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே, மருத்துவமனையின் விபத்து சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல் பாதுகாப்பு தொடா்ந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT