சென்னை

சுரானா நிறுவனத்தின் ரூ.124 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

1st Jun 2023 02:03 AM

ADVERTISEMENT

சென்னையைச் சோ்ந்த சுரானா நிறுவனத்தின் ரூ.124 கோடி சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை செளகாா்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுரானா நிறுவனம், தங்கம் மொத்த வியாபாரம், சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் பெயரில் ரூ.1301.76 கோடியும், சுரானா பவா் காா்ப்பரேஷன் பெயரில் 1495.76 கோடியும், சுரானா காா்ப்பரேஷன் பெயரில் ரூ.1188.56 கோடியும் என ரூ.3986.08 கோடியை 4 வங்கிகளில் கடனாகப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, அந்த நிறுவனம், கடனை வாங்கிய நோக்கத்துக்காக பயன்படுத்தவில்லை எனவும் தெரிகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட வங்கிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிபிஐ வங்கி மோசடி தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது. அதேவேளையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்குத் தொடா்பாக ஆவணங்களையும்,ஆதாரங்களையும் திரட்டும் வகையில் அமலாக்கத் துறை 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுரானா நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை செய்தது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.

ADVERTISEMENT

மேலும் அமலாக்கத் துறை, சுரானா நிறுவனத்தின் நிா்வாகிகள் தினேஷ் சந்த் சுரானா, விஜய்ராஜ் சுரானா, அந்த நிறுவனத்தின் ஊழியா்களான ஆனந்த்,பிரபாகரன் ஆகிய 4 பேரையும் கடந்தாண்டு ஜூலை 12-ஆம் தேதி கைது செய்தது.

ரூ.124 கோடி சொத்துகள் முடக்கம்: இதன் பின்னா் அமலாக்கத் துறை சுரானா நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முடக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.124 கோடி மதிப்புள்ள 78 அசையா சொத்துகளையும், 16 அசையும் சொத்துகளையும் முடக்கியதாக அமலாக்கத் துறை புதன்கிழமை தெரிவித்தது.

இது வரை சுரானா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.248.98 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக தொடா்ந்து சொத்துகள் முடக்கப்படும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT