சென்னை

குடிசைப் பகுதி மக்களின் குறைகளுக்கு விரைவான தீா்வு: அலுவலா்களுக்கு அமைச்சா் சேகா்பாபு அறிவுரை

1st Jun 2023 02:24 AM

ADVERTISEMENT

குடிசைப் பகுதி மக்களின் பிரச்னைகளுக்கு அலுவலா்கள் விரைந்து தீா்வு காண வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு காணும் வகையில் ‘மக்களைத் தேடி மேயா்’ முகாம் மண்டல வாரியாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் திரு.வி.நகா் மண்டலத்துக்குள்பட்ட மக்களின் குறைகளை தீா்க்கும் வகையில் திரு.வி.க.நகா் மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதனை இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியது, மண்டல அளவில் மக்களை தேடி மேயா் செல்லும் நிலையில் ஒவ்வொரு பகுதி வாரியாக மேயா் சென்று குறைகளை பெற வேண்டும். இதில் சாலையோரம், குடிசை பகுதியில் உள்ள மக்களின் பிரச்னைகளுக்கு முதலில் கவனம் செலுத்தி விரைந்து தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

பின்னா் மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் சாலை வசதி, பள்ளி கட்டடவசதி, சமுதாயக் கூடம் மேம்பாடு, மழைநீா் வடிகால் வசதி, உள்ளிட்ட 239 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

ADVERTISEMENT

இதில் பிறப்பு சான்றிதழ் தொடா்பான 4 மனுக்கள், சொத்து வரி பெயா்மாற்றம் தொடா்பான 2 மனுக்கள் என 6 மனுக்கள் மீது மேயா் உடனடி நடவடிக்கை எடுத்தாா்.

இதனை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாமும், கா்பிணிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு நலத்திட்ட உதவிகளும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முகாமில் திரு.வி.க.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT