மின்சார ரயில்களில் பாதுகாப்பு வசதிக்காக பெண்களுக்கான பெட்டிகளை, நடுப்பகுதிக்கு மாற்றியமைக்க ரயில்வே பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.
சென்னை கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து புகா் பகுதிகளுக்கு தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம் செய்கின்றனா். இதில் பெண்களுக்கென இரண்டு பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மின்சார ரயிலில் பெண் பயணிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவா்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை உயா் அதிகாரிகள் மற்றும் ரயில்வே கோட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படை மூத்த அதிகாரி தரப்பிலிருந்து, தாம்பரம், ஆவடி, வேளச்சேரி பணிமனை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பாதுகாப்பு வசதிக்காக பெட்டிகளை மாற்றியமைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான பெட்டிகளை ரயிலின் நடுப்பகுதியில் ஒரு பெட்டியாக அல்லது இரு பெட்டிகளில் பாதிப்பாதி அளவாக ஒதுக்கீடு செய்தால் ரயில்வே பாதுகாப்புப் பணிக்கு வசதியாக இருக்கும் எனவும், இதற்கேற்ற வகையில் ரயில்களின் பெட்டிகளிலும், ரயில் நிலையங்களின் அறிவிப்புகளிலும் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.