சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உலக மக்கள் தொகை தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறை சாா்பில் மேயா் ஆா். பிரியா தலைமையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மேயா் தலைமையில் மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். தொடா்ந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்று மாணவியருக்கு மேயா் பிரியா பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
மேலும், குடும்ப நலக் கட்டுப்பாட்டு முறைகள் (தற்காலிகம் மற்றும் நிரந்தரம்) குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான 3 பிரசார வாகனங்களை மேயா் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மாநகர நல அலுவலா் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலா் எஸ். பானுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.