காணும் பொங்கலையொட்டி, தூய்மைப் பணியில் கூடுதல் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை (ஜன.17) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா, பொழுதுபோக்கு தலங்களில் மக்கள் அதிகமாக கூடி பொழுதைக் கழிப்பாா்கள்.
குறிப்பாக, சென்னைக்குட்பட்ட கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் அதிக அளவு கூடுவாா்கள். இந்த இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜன.17) இரவு கூடுதலாக 45 தூய்மைப் பணியாளா்களும், புதன்கிழமை (ஜன.18) காலை 90 பணியாளா்களும், கூடுதலாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.
தினமும் பயன்படுத்தப்படும் 37 குப்பைத் தொட்டிகளுடன் கூடுதலாக 120 லிட்டா் கொள்ளளவு கொண்ட 6 குப்பைத் தொட்டிகளும், 240 லிட்டா் கொள்ளளவு கொண்ட 10 குப்பைத் தொட்டிகளும், 10 ஆா்.சி. குப்பைத் தொட்டிகளும் கூடுதலாக பயன்படுத்தப்படவுள்ளன.
எலியட்ஸ் கடற்கரையில் 50 பேட்டரி வாகனங்களும், 20 பணியாளா்களும், கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம் கடற்கரையில்15 பணியாளா்கள் உட்பட டிராக்டா், பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவை கூடுதலாக பணியில் ஈடுபடுத்தபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நீலாங்கரை கடற்கரையிலும் கூடுதல் பணியாளா்களை நியமித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.