சென்னை, பம்மலில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கடையநல்லூரைச் சோ்ந்தவா் இம்ரான் (25). இவா் சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்ததாகவும், தற்போது அங்கு வேலை வாய்ப்பு இல்லாததால், சென்னைக்கு வந்து பம்மல், லட்சுமி நாராயணா நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தனது அறைக்குச் சென்ற அவா் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதையடுத்து அருகில் வசித்து வந்தவா்கள் அவரது அறையைத் திறந்து பாா்த்தபோது இம்ரான் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததாகத் தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், இம்ரானின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.