வெங்காயம் சாகுபடி அதிகரித்துள்ளதால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து தொடா்ந்து அதிகரித்து 1,400 டன்னாக உயா்ந்துள்ளது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து காய், கனி, மலா் வியாபாரிகள் நல சங்கத்தின் பொருளாளா் சுகுமாா் கூறுகையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக், கா்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் தெலங்கானாவில் நவம்பா் முதல் ஜனவரி வரை வெங்காய சாகுபடி அதிகமாக செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு வெங்காய விளைச்சல் அதிகரித்து இப்போது அறுவடை உச்சத்தில் இருப்பதால் கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து அதிகரித்துள்ளது. நாசிக் வெங்காயம் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20, பெல்லாரி ரூ.10 முதல் ரூ.12 என மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விற்பனையில் கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. திங்கள்கிழமை (பிப்.27) 90 முதல் 100 லாரிகளில் 1,400 டன் வெங்காயங்கள் விற்பனைக்கு வந்தன. இரண்டு வாரத்துக்கு முன்பு 60 லாரிகளில் 900 டன் வெங்காயங்கள்தான் வந்தன. இயல்பை விட 500 டன் வரத்து அதிகரித்து உள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு வரத்து அதிகரிக்கும். இதனால் வெங்காய விலை மேலும் குறையும் என்றாா் அவா்.