சென்னை

11 பெண் ஆளுமைகளுக்கு 'தேவி விருதுகள்'

DIN

பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த  11 பெண் ஆளுமைகளுக்கு 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் 'தேவி விருதுகள்' வழங்கப்பட்டன.

23வது 'தேவி விருதுகள்' விழா சென்னையில் இன்று (பிப். 8) நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். விழாவின் தொடக்கத்தில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் பிரபு சாவ்லா, கிரண்பேடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

11 பெண்களுக்கு தேவி விருதுகள்

நந்திதா கிருஷ்ணா

சென்னையைச் சேர்ந்த நந்திதா கிருஷ்ணா வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். சமூக ஆர்வலரான இவர், குரும்பா ஓவியம், கோட்டா மண்பாண்டங்கள், மாமல்லபுரத்தில் பாரம்பரிய ஓவியங்களை பலரிடம் கொண்டு சேர்த்ததற்காக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். பள்ளிகளில் தமிழ் நாட்டுப்புறக் கலை வடிவங்களை அறிமுகப்படுத்தும் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். 

தேவி விருது பெறும் நந்திதா கிருஷ்ணா

வித்யா சுப்பிரமணியன்

வித்யா சுப்பிரமணியன் கர்நாடக இசைக்கலைஞர். பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இவர், கர்நாடக பாடல்களைப் பாடுவதன் மூலம் பலரால் அறியப்பட்டவர். பத்ம பூஷண் லால்குடி ஜெயராமனிடம் முறையாக இசை கற்றவர். வித்யா சுப்பிரமணியன் அகாதமி என்ற நிறுவனத்தின் மூலம் பாரம்பரிய இந்திய கலைகளையும், கர்நாடக இசையையும் பயிற்றுவித்து வருகிறார்.

தேவி விருது பெறும் வித்யா சுப்பிரமணியன்

விஷாகா ஹரி, பாடகி

கலைமாமணி விஷாக ஹரி பழமையான கலை வடிவமான கதா கீர்த்தனையின் பயிற்சியாளர். அன்பு மற்றும் அமைதியை பரப்பும் வகையில் பழமை வாய்ந்த புராண கதைகளை  இசையுடன் சேர்த்து வழங்கி வருகிறார்.  

விருது பெற்றபோது அவர் பேசியதாவது, குருவை விட தற்போது சீடர்கள் சிறந்தவர்களாக உள்ளனர். ஆசிரியர்கள் என்று யாரும் இல்லை. கலையில் மூத்தவர்கள், இளையவர்கள் என்று இரு பிரிவுகள் மட்டுமே இருப்பதாகப் பார்க்கிறேன் எனக் குறிப்பிட்டார். 

தேவி விருது பெறும் விஷாகா ஹரி

ராதிகா சந்தானகிருஷ்ணன்

ராதிகா சந்தானகிருஷ்ணன் சமூக ஆர்வலர். பெண்நலம் என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி முழுநேரமாக பெண்களுக்கு உதவி வருகிறார்.  மர்பக, கருப்பை மற்றும் வாய் புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் வருகிறார். அவருக்கு தேவி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விருது வாங்கிய பிறகு அவர் பேசியதாவது, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, என் குடும்பம் எனக்குத் துணை நிற்கிறது. அவர்கள் உதவியுடன் பெண் நலம் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். இதன் மூலம் இதுவரை 3 லட்சம் பெண்களுக்கு உதவி புரிந்துள்ளோம். புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதற்கு நாங்கள் உதவுகிறோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தேவி விருது பெறும் ராதிகா சந்தானகிருஷ்ணன்

அனுராதா கிருஷ்ணமூர்த்தி, நம்ரதா சுந்தரேசன்


அனுராதா கிருஷ்ணமூர்த்தி, நம்ரதா சுந்தரேசன் ஆகியோர் இளம் தொழில்முனைவோர்கள். இவர்கள் இயற்கை முறையில் பாலாடைக்கட்டிகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு சர்வதேச அளவில் வணிகம் செய்து வருகின்றனர். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகின்றனர். 

தேவி விருது பெறும் நம்ரதா சுந்தரேசன், அனுராதா கிருஷ்ணமூர்த்தி


பூர்ண சந்திரிகா

பூர்ண சந்திரிகா சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல காப்பகத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மனநலப் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதுடன் அவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்து மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளிலும் பங்கேற்க உதவுகிறார். கரோனா காலகட்டத்தில் மனரீதியாக பாதிக்கப்பட்ட பலருக்கு ஆலோசனை வழங்கி அவர்களை மீட்டார். அவருக்கு தேவி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விழாவின்போது பேசிய அவர், கரோனா காலத்தில் அனைவருக்குமே அச்சம் இருந்தது. கெட்டதிலும் ஒரு நல்லது என்பதுதான் கரோனாவில் நடந்தது.
எல்லோரும் சூழலைப் புரிந்துகொண்டனர். அதனால் அந்த பெருந்தொற்றிலிருந்து வெளிவர முடிந்தது. 

மனநல ஆலோசனை வழங்குவதில் அரசும் முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இரண்டு பேர் மனநல மருத்துவ சிகிச்சை முடிந்து சமீபத்தில் மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்டனர். அரசும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தது. இனி இதுபோன்ற பல நேர்மறையான கதைகள் உருவாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

தேவி விருது பெறும் பூர்ண சந்திரிகா

விஜயலட்சுமி நாச்சியார்

விஜயலட்சுமி நாச்சியார் அப்பாச்சி எக்கோலாஜிக் என்ற பருத்தியாடை நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். எதிகஸ் என்ற ஆடை உற்பத்தி நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார். இந்த நிறுவனம் நவீன கலாசாரத்திற்கேற்ற உடைகளை  இயற்கை வழியில் உற்பத்தி செய்து வருகிறார். இவருக்கு தேவி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விருது பெற்றபோது அவர் பேசியதாவது, பருத்தி ஆடைகளை நெய்யும் குடும்பத்திலிருந்து வந்துள்ளேன். அதனால் எங்களுக்கு ஒரு பிராண்டை உருவாக்க நினைத்தேன். அதற்காக அனைவரும் வேலை செய்ய வேண்டும் என நினைத்தேன். 

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக புடவைகளைத் தயாரித்து வருகிறோம். ஆனால் யாரும் எங்களை அங்கீகரிக்கவில்லை. தற்போது இந்த அங்கீகாரம் நெகிழ்ச்சியாக உள்ளது. தற்போது 6,400 வண்ணங்களில் புடவைகளை உற்பத்தி செய்து வருகிறோம் என்றார்.

தேவி விருது பெறும் விஜயலட்சுமி நாச்சியார்

பிரியதர்ஷினி கோவிந்த் 

இந்தத் தலைமுறையில் முன்னோடி பரதநாட்டியக் கலைஞராக பிரியதர்ஷினி கோவிந்த் அறியப்படுகிறார். இவர் பாரம்பரிய பரதநாட்டியத்துடன் புதுமையான நடன அசைவுகளையும் சரிவிகிதத்தில் கலந்து அரங்கேற்றம் செய்வதால், பரதநாட்டியத்தில் புதிய எல்லைகளை வெளிப்படுத்தி வருகிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல நிகழ்ச்சிகளில் பரதநாட்டியத்தைத் தனியொரு நபராக அரங்கேற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர். அவருக்கு தேவி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 

விருது வாங்குபோது அவர் பேசியதாவது, நடனக்கலைஞர்களை மந்திரவாதிகள் போன்றவர்கள் என்றே நான் கருதுகிறேன். நடனம் மூலம் பார்வையாளர்களை கவர்கிறோம். அபிநயா, கலாநிதி நாராயணன் ஆகியோர் எனது நடன குரு. அவர்களை நான் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

தேவி விருது பெறும் பிரியதர்ஷினி கோவிந்த் 

ரம்யா எஸ். மூர்த்தி

சென்னையைச் சேர்ந்த ரம்யா எஸ். மூர்த்தி, நிமயா ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராக  உள்ளார். சிறப்பு உதவிகள் தேவைப்படும் குழந்தைகளின் நலனுக்காக செயல்படுவதையே குறிக்கோளாக கொண்ட அவர், கடந்த 8 ஆண்டுகளாக அதற்காக உழைத்து வருகிறார். சிந்தனைக் குறைபாட்டால் (ஆட்டிசம்) பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கற்றலை வேகப்படுத்தும் வகையில் இவர் கண்டறிந்த கருவி மற்றும் பயிற்சி முறை பலரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு தேவி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், நான் பி.எச்டி., படித்துக்கொண்டிருக்கும்போது என்னுடன் பயின்ற நபரின் தூண்டுதலின்பேரில், தொழில் முனைவோராக மாறினேன். பெங்களூருவில் ஒன்றரை ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றினேன். அப்போது சிந்தனைக் குறைபாடுள்ள குழந்தைகளைச் சந்தித்தேன். அதன் பிறகு என் வாழ்க்கை மாறியது. அதற்காக பெருமைப்படுகிறேன் எனக் குறிப்பிட்டார். 

தேவி விருது பெறும் ரம்யா எஸ். மூர்த்தி

ககன்தீப் காங்

பேராசிரியர் ககன்தீப் காங், தற்போது தடுப்பூசிகள் மற்றும் பொது சுகாதாரத்தில் பணியாற்றி வருகிறார். இந்தியாவில் குழந்தைகள் மற்றும் குடல் தொற்று நோய்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர் பணியாற்றி வருகிறார்.

குழந்தைகளின் குடல் நோய்த்தொற்றுகள் மற்றும் அவற்றின் பின்விளைவுகள் தடுப்புக்கான புதிய நுண்ணறிவு மற்றும் நடைமுறை அணுகுமுறைகளை இவர் மேற்கொண்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

இந்தியாவில் குடல் செயல்பாடு, உடல் வளர்ச்சி, அறிவாற்றல்  மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு ஆராய்ச்சியை உருவாக்க அவர் முயன்று வருகிறார். 
 

தேவி விருது பெறும் ககன்தீப் காங்

ஜோஷ்னா சின்னப்பா

ஜோஷ்னா சின்னப்பா ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிட்டிஷ் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். 2014 ஆகஸ்ட்டில் நடைபெற்ற  20வது காமன்வெல்த் போட்டியில் தீபிகா பல்லிகலுடன் இணைந்து தங்கம் வென்றார். இது இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி. கரோனாவுக்குப் பிறகு எகிப்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார். இந்திய தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை 19 முறை வென்றுள்ளார். அவருக்கு தேவி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய ஜோஷ்னா, வணக்கம். மிகவும் பெருமையாக உள்ளது. நியூ இந்தியன் எக்ஸ் குழுமத்துக்கு நன்றி. நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், மிகவும் கடினமானதுதான் இந்தத் துறை. பிடித்த உணவுகளை உண்ணக் கூட முடியவில்லை. கடினமான சூழல்கள் இருந்தாலும் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பது மட்டுமே கனவாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

தேவி விருது பெறும் ஜோஷ்னா சின்னப்பா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT