பத்தாயிரம் மெ. டன் கோதுமை விற்பனைக்கான மின்னணு ஏலம் பிப்.15-இல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மத்திய உணவு கழகத்தின் தமிழ்நாடு மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் கோதுமையின் மொத்த, சில்லறை விலையைக் குறைக்கும் வகையில் திறந்த வெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் 30 லட்சம் மெ. டன் கோதுமை விற்பனை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய உணவுக் கழக தமிழ்நாடு மண்டலம் கோதுமை பொருள்களை விற்பனை செய்ய திட்டமிட்டு, அதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஜன.27-ஆம் தேதி 85 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனைக்கான மின் ஏலம் நடத்தப்பட்டது.
இதில் பிப்.1-ஆம் தேதி 21 நிலையங்களில் இருந்து 46 ஆயிரத்து 90 மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, 10 ஆயிரம் மெ. டன் கோதுமை தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது. பிப்.15-ஆம் தேதி இதற்கான மின் ஏலம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.