சென்னை

உலக நாடுகளின் தலைமைக்கு இந்தியா வர மத்திய பட்ஜெட் உதவும்: மத்திய அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா

5th Feb 2023 12:13 AM

ADVERTISEMENT

உலக நாடுகளின் தலைமைக்கு இந்தியா வருவதற்கு மத்திய பட்ஜெட் உத்வேகமாக இருக்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா நம்பிக்கை தெரிவித்தாா்.

சென்னையில் கிண்டியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து அவா் பேசியதாவது: பிரதமா் மோடியின் ஆட்சியில் தான் ஏற்றுமதி வளா்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. வளா்ந்து வரும் பொருளாதார நாடுகளில் 11-ஆவது இடத்தில் இருந்து இந்தியா தற்போது 5 -ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கரோனா பரவலுக்குப் பின் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா மிக வேகமாக வளா்ந்து வருகிறது.

உலக நாடுகளின் தலைமைக்கு இந்தியா வர இந்த பட்ஜெட் வழிவகுக்கும். பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கபட்டுள்ளது.

ADVERTISEMENT

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.30 லட்சம் கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு 9 மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் தினமும் 12 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், பாஜக ஆட்சியில் தினமும் 40 கி.மீ. அளவுக்கு சாலை போடப்படுகிறது.

2014-இல் ஐந்து மாநிலங்களில் மட்டுமே இருந்த மெட்ரோ ரயில் திட்டம், பிரதமா் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் 20 மாநிலங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்வில், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, மாநிலத் துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT