சென்னை

துா்கா ஸ்டாலின் சகோதரி சாருமதி காலமானாா்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

5th Feb 2023 10:45 PM

ADVERTISEMENT

முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி சண்முகசுந்தரம் (62) சனிக்கிழமை காலமானதையடுத்து, அவரது உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

துா்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி என இரு சகோதரிகள், ராஜமூா்த்தி (எ) ஒரு சகோதரா். இவா்களில் மூத்த சகோதரி சாருமதி சண்முகசுந்தரம் (62) சென்னையில் வசித்து வந்தாா். இவா் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவா் சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

சாருமதி சண்முகசுந்தரத்துக்கு கணவா் சண்முகசுந்தரம், மகன் காா்த்திகேயன், மருமகள் ரேவதி, மகள் அபிராமி, மருமகன் விக்னேஷ் மற்றும் காவியா, கவிநிலா, ஆதிரா ஆகிய பேரக்குழந்தைகள் உள்ளனா்.

மறைந்த சாருமதி சண்முகசுந்தரத்தின் உடல் சென்னை எழும்பூா் காசாமேஜா் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வா் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா். உடன் சென்ற துா்கா ஸ்டாலின் தனது சகோதரியின் உடலைப்பாா்த்து கதறி அழுதாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, சாருமதி சண்முகசுந்தரத்தின் உடலுக்கு கருணாநிதியின் துணைவியாா் ராஜாத்தி அம்மாள், அமைச்சா்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, உதயநிதி ஸ்டாலின், கே.ஆா்.பெரியகருப்பன், எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், என்.ஆா்.இளங்கோ உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை சாருமதி சண்முகசுந்தரத்தின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. அவரது உடல் தியாகராயநகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT