சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 3 வாரங்களில் 1,581 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்குள்பட்ட பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளை அகற்றவும் மண்டல அலுவலா் தலைமையில் மண்டல பறக்கும் படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இக்குழுவானது வாரத்தில் மூன்று நாட்கள் (திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை) முக்கிய சாலைகளில் களஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றி வருகின்றனா்.
அதனடிப்படையில், மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் காவல்துறை அலுவலா்கள் இணைந்து சிறப்பு நடவடிக்கையாக கடந்த மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 446 நிரந்தர கட்டுமானங்கள் மற்றும் 1,135 தற்காலிக கூடாரங்கள் கொண்டு அமைக்கப்பட்ட 1,581 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 274 ஆக்கிரமிப்புகளும், திரு.வி.க.நகரில் 222 ஆக்கிரமிப்புகளும், அடையாறில் 221 ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.