வடசென்னை மேம்பாட்டுத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
நிகழ் நிதியாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்தில் சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்துக்கு 50 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டப்பேரவை தொகுதிகளின் மேம்பாட்டுக்கான 34 அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக வடசென்னை கொண்டித்தோப்பு பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம், இயன்முறை சிகிச்சை மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையம் அமைப்பது தொடா்பாக களஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் இத்திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, சென்னை மேயா்ஆா். பிரியா, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் அபூா்வா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஐட்ரீம். மூா்த்தி, ஜே.ஜே.எபிநேசா், சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையா் எம். சிவகுரு பிரபாகரன், நகரமைப்புக் குழுத் தலைவா் இளைய அருணா, சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளா்கள் ருத்ரமூா்த்தி, பாலசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.