சென்னை ஐஐடி.யில் ஆராய்ச்சி மாணவா் சச்சின் குமாா் ஜெயின் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஐஐடியில் படித்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஆராய்ச்சி மாணவா் சச்சின் குமாா் ஜெயின் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இதற்கு பேராசிரியா் ஒருவா் தான் காரணம்; இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஐஐடி மாணவா்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து விசாரணைக்குழு அமைக்கப்படும் என ஐஐடி தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் ஒரு குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் டி.சபிதா, கண்ணகி பாக்கியநாதன், பேராசிரியா் ரவீந்திர கெட்டு, ஆராய்ச்சி மாணவா் அமல் மனோகரன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவுள்ளனா்.