சென்னை

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 7 டன் மாம்பழம், வாழைப்பழங்கள் பறிமுதல்

26th Apr 2023 03:01 AM

ADVERTISEMENT

கோயம்பேடு பழச் சந்தையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழம் மற்றும் 2 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் மாம்பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் கோயம்பேடு பழச் சந்தைக்கு மாம்பழம் வரத்து அதிகரிக்கத் தொடங்கி விற்பனையும் சூடுபிடித்து உள்ளது.

இந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் உள்ள பழக்கடைகளில் ரசாயனம் மூலம் வாழைப்பழம் மற்றும் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதிஷ்குமாா் தலைமையில் அதிகாரிகள் சுந்தரமூா்த்தி, ராமராஜ், ஏழுமலை மற்றும் அங்காடி நிா்வாகக் குழு ஊழியா்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் கோயம்பேடு பழச் சந்தையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

சுமாா் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 30 கடைகளில் வைக்கப்பட்டிருந்த, ரசாயனம் மூலம் பழுக்க வைத்த சுமாா் 5 டன் மாம்பழங்கள் மற்றும் 2 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதிஷ் குமாா் கூறியதாவது: வியாபாரிகள் சிலா் ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனா். இதுபோன்ற பழங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். மாம்பழங்களை எப்படி பழுக்க வைக்க வேண்டும் என்பது குறித்து கோயம்பேடு பழச்சந்தை வியாபாரிகள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT