சென்னை

ஊதிய உயா்வு: அரசு மருத்துவா்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்

29th Sep 2022 12:21 AM

ADVERTISEMENT

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள், தங்களது குடும்பத்தினருடன் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவா்களும், அவா்களது குடும்பத்தினரும் பங்கேற்றனா். நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவா் வசீகரன், சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் டாக்டா் ஜி.ஆா்.ரவீந்திரநாத் ஆகியோா் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனா்.

இதுகுறித்து அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள்பிள்ளை கூறியதாவது: அரசாணை 354-இன்படி ஊதிய உயா்வு வழங்க வேண்டும். கலந்தாய்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவா்களுக்கு நீதி வேண்டும். கரோனாவால் உயிரிழந்த மருத்துவா் விவேகானந்தன் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ற அரசு வேலை தரப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது நேரில் வந்து ஆதரவு தெரிவித்த தற்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், தற்போது முதல்வராக உள்ளாா். ஆனால், இன்றளவும் எங்களது அரசாணை 354 அமலாக்கப்படவில்லை. அந்த அரசாணையை அமல்படுத்த மாட்டோம்; சிறு தொகையை மட்டுமே தருவோம்; அதுவும் கூட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் மருத்துவா்களுக்கு தரமாட்டோம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். அரசு மருத்துவா்கள் தொடா்ந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருவதை நம் முதல்வா் நிச்சயம் விரும்ப மாட்டாா் என்று நாம் நம்புகிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இதனிடையே, மருத்துவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியோா் மருத்துவா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT