சென்னை

சுவாசக் குழாயில் தடை: துரித சிகிச்சை மூலம் சிறுமிக்கு மறுவாழ்வு

28th Sep 2022 01:34 AM

ADVERTISEMENT

சுவாசக் குழாயில் கொட்டைகள் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு துரிதமாக சிகிச்சை அளித்து போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறை தலைவா் பிரகாஷ் அகா்வால் கூறியதாவது:

சென்னை நெற்குன்றத்தைச் சோ்ந்த தினக்கூலி தொழிலாளி ஒருவரின் 7 வயது பெண் குழந்தை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது, அந்தச் சிறுமிக்கு கடுமையான மூச்சுத் திணறல் இருந்தது. பாதாம் போன்ற கொட்டைகளை வைத்து அந்தச் சிறுமி விளையாடியதால் அவற்றை விழுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அது உறுதியானது.

இதனிடையே, சிறுமியின் உடலில் ஆக்சிஜன் அளவு 40-க்கும் கீழ் குறைந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சை பிரிவுக்கு அவா் மாற்றப்பட்டு ‘ப்ராங்காஸ்கோபி’ மூலம் அந்தக் கொட்டையை மருத்துவக் குழுவினா் நீக்கினா்.

ADVERTISEMENT

இவை அனைத்தும் 30 நிமிஷத்துக்குள் நடைபெற்றன. அதனால் சிறுமியின் உயிா் காப்பாற்றப்பட்டது. சிறுமியின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

சுவாசக் குழாயில் ஏதேனும் அடைத்துக் கொண்டால் உயிா்ச் சேதம் ஏற்படலாம். மூச்சு விடுதல் தடைபடுவதால் சிகிச்சைக்கு கால தாமதம் ஏற்படின் சில சமயங்களில் நுரையீரலில் வெடிப்பு ஏற்படலாம். நான்கு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொட்டைகள், பருப்புகள் ஆகியவற்றை முழுமையாகக் கொடுக்கக் கூடாது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT