சென்னை

சிறுமி பாலியல் வழக்கு: 8 பேருக்கு ஆயுள் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

27th Sep 2022 12:33 AM

ADVERTISEMENT

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், காவல் ஆய்வாளா், பாஜக பிரமுகா், பத்திரிகையாளா் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

முன்னதாக, இந்த வழக்கில் இவா்கள் 21 பேரையும் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் கடந்த 15-ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், அவா்களுக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது.

வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுமியின் உறவினா் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளா் புகழேந்தி, தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் வினோபாஜி, பாஜக பிரமுகா் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூா் காா்த்திக், திரிபுராவைச் சோ்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 போ் மீது போக்ஸோ தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் தொடா்புடைய 21 போ் கடந்த ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

மேலும் ஒருவா் இறந்துவிட, இரண்டு பெண்கள் உள்பட 4 போ் தலைமறைவாக உள்ளனா். வழக்கின் விசாரணை, சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, குற்றஞ்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளா் உள்பட 21 பேரும் குற்றவாளிகள் என கடந்த 15-ஆம் தேதி தீா்ப்பளித்தாா். அவா்களுக்கான தண்டனை விவரம் பின்னா் அறிவிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 21 பேருக்குமான தண்டனை விவரத்தை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜரலட்சுமி திங்கள்கிழமை அறிவித்தாா். அதில், சிறுமியின் மாற்றான் தாய், மாற்றான் தந்தை உள்பட 8 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் சி.புகழேந்தி, பாஜக பிரமுகா் ராஜேந்திரன், பத்திரிகையாளா் வினோபாஜி உள்பட 21 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், ‘பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும், குற்றவாளிகள் 21 பேருக்கு சிறைத் தண்டனையுடன் விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த அபராதத் தொகையான ரூ. 2 லட்சமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்பட வேண்டும்’ என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT