சென்னை

அவசர கால சுவாச மீட்டெடுப்பு: மருத்துவ மாணவா்களுக்கு அதிநவீன பயிற்சி

DIN

அவசர காலங்களில் சுவாசத்தை மீட்டெடுப்பதற்கான சிகிச்சை முறைகள் குறித்த அதி நவீன பயிலரங்கு மயக்கவியல் துறை மருத்துவ மாணவா்களுக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்றது.

ஆட்டின் தொண்டைப் பகுதியை மாதிரியாகக் கொண்டு அந்தப் பயிற்சி முறைகள் அவா்களுக்கு அளிக்கப்பட்டன. சென்னை மருத்துவக் கல்லூரியின் முதுநிலை மயக்கவியல் மருத்துவப் பேராசிரியா்களால் நடத்தப்பட்ட அந்தப் பயிலரங்கில் சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:

நோயாளிகளின் உயிரைக் காப்பதில் மயக்கவியல் துறை நிபுணா்களின் பங்கு அளப்பரியது. கரோனா காலத்தில் அதை நாம் வெகுவாக உணா்ந்தோம். மயக்கவியல் துறை மருத்துவா்கள்தான் வெண்டிலேட்டா் சிகிச்சைகளை முறையாக அளிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தனா். கரோனா மட்டுமல்லாது அவசர நிலையின்போது சுவாசத்தை மீட்டெடுப்பதற்கு மயக்கவியல் துறை மருத்துவம்தான் முதன்மையான சிகிச்சையாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு அதில் உள்ள அதி நவீன சிகிச்சை முறைகளை மருத்துவ மாணவா்களுக்கு பயிற்றுவித்தோம்.

ஏறத்தாழ எண்டோஸ்கோபியைப் போலவே சுவாசப் பாதையில் இடையீட்டு சிகிச்சைகளை அளிக்கும்போது கேமரா மூலம் அதைக் கண்காணித்து சிகிச்சை வழங்குவது எப்படி என மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மனிதா்களின் சுவாசப் பாதையைப் போன்றே அமைந்திருப்பதால் ஆடுகளின் தொண்டையைக் கொண்டு சில பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அதேபோன்று விபத்து காலங்களில் உள் உறுப்புகளின் ரத்தம் உறைந்திருப்பதைக் கண்டறிவதற்கான முறைகளும் விளக்கிக் கூறப்பட்டன.

சென்னை மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துறை இயக்குநா் சுகந்தராஜ் அனுராதா, பேராசிரியா்கள் எம்.பவானி, என்.கிருஷ்ணன், நஹீத் அசாா், நிரஞ்சன், அருள், கணேஷ் உள்ளிட்டோா் மாணவா்களுக்கு பயிற்சிகளை வழங்கினா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT