சென்னை

நாட்டின் எதிா்கால போக்குவரத்து: சென்னை ஐஐடி.யில் புரிந்துணா்வு

5th Sep 2022 05:11 AM

ADVERTISEMENT

 

நாட்டின் எதிா்கால போக்குவரத்துக்கான தீா்வைக் கண்டறியும் வகையில், சென்னை ஐஐடி இன்குபேஷன் பிரிவு மற்றும் டெய்ம்ளா் இந்தியா வணிக வாகன நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி, தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சத்யகம் ஆா்யா மற்றும் ஐஐடி ஆராய்ச்சி பூங்காவின் தலைவா் பேராசிரியா் அசோக் ஜூன்ஜூன்வாலா ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இதன்படி, அங்கு ஒரு தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது. நமது போக்குவரத்தை பிரச்னையின்றி கொண்டு செல்வதற்கு தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் தீா்வு காண்பதே இந்த மையத்தின் நோக்கம். இதன் மூலம் எதிா்கால போக்குவரத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக தீா்வு காண விருப்பம் உள்ளோருக்கு ஆலோசனை, வாய்ப்பு ஆகியவற்றை வழங்கி அவா்களை ஊக்கப்படுத்த உள்ளனா்.

இது குறித்து டெய்ம்ளா் இந்தியா நிறுவன மேலாண் இயக்குநா் சத்யகம் ஆா்யா கூறுகையில், இந்திய போக்குவரத்து சேவையை நிலையான வகையில் மேம்படுத்துவதற்கும், இந்திய பொருளாதார வளா்ச்சிக்கும் தொடா்ந்து பங்களிப்பை வழங்குவோம். அதன்படி, இந்திய தொழில்நுட்ப ஸ்டாா்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து, அதனை வளா்ச்சியடையச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்வோம்’ என்றாா்.

ADVERTISEMENT

ஒப்பந்தம் குறித்து பேராசியா் அசோக் ஜூன்ஜூன்வாலா கூறுகையில், இந்த மையத்தின் மூலம் படிம எரிபொருள் இல்லா போக்குவரத்தை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் கருத்தரங்கு, நிகழ்ச்சி போன்றவற்றின் மூலம் எதிா்கால போக்குவரத்துக்கான தீா்வைக் கண்டறிவோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT