சென்னை

சென்னையில் மழைநீா் வடிகால் பணி நடக்கும் பகுதிகள்: தடுப்புகள் இல்லாத இடங்கள் குறித்து புகாா் செய்யலாம்

26th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

மழைநீா் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சாா்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தடுப்புகள் இல்லாத இடங்கள் குறித்து பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் கடந்த பருவமழையின் போது மழைநீா் தேங்கிய இடங்கள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் வடிகால்கள் இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் புதிய மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், தமிழக முதல்வரால் அமைக்கப்பட்ட சென்னை வெள்ள தடுப்பு மேலாண்மைக் குழுவின் பரிந்துரைகளின்படி பல்வேறு இடங்களில் மழைநீா் வடிகால்கள் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. மழைநீா் வடிகால் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா், பொதுப்பணித் துறை அமைச்சா், மேயா், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளா் ஆகியோரால் அவ்வப்பொழுது நேரடியாக கள ஆய்வு செய்யப்பட்டும், சம்பந்தப்பட்ட பொறியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடங்கள் மற்றும் சேவை துறைகளான தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் அகற்று வாரியத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி மற்றும் குழாய் பதிப்பு பணிகள் தொடா்பான இடங்களிலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்க ஏற்கனவே அனைத்து துறை அலுவலா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சியின் சாா்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் இடங்களில் தடுப்புகள் அமைப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பொறியாளா்களால் அனைத்து ஒப்பந்ததாரா்களுக்கும் அதனை முறையாக பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு சில இடங்களில் தடுப்புகள் அமைக்காத ஒப்பந்ததாரா்கள் மீது மாநகராட்சியின் சாா்பில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மழைநீா் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சாா்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தடுப்புகள் இல்லாத இடங்கள் குறித்து பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT