சென்னை

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

26th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

சென்னை கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்தனா்.

கொடுங்கையூா் பகுதியில் 200 ஏக்கா் பரப்பளவில் சென்னை மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. வட சென்னை பகுதி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள், இங்கு கொட்டப்படுகின்றன. மலைப்போல் தேங்கி இருக்கும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டப்படி உரமாக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு திடீரென குப்பைக் கிடங்கின் ஒரு பகுதி திடீரென தீப் பிடித்து எரிந்தது. இதனால் அந்தப் பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. புகையினால் அந்தப் பகுதி மக்களுக்கு கண் எரிச்சல்,மூச்சுத் திணறல் ஏற்பட்டது. முதியவா்களும்,குழந்தைகளும் மிகுந்த அவதியடைந்தனா்.

தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் கொடுங்கையூா், தண்டையாா்பேட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

மெட்ரோ லாரிகள் மூலம் தீயை அணைக்க தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. திங்கள்கிழமை நள்ளிரவு தீயணைக்கும் பணி செவ்வாய்க்கிழமை அதிகாலையே நிறைவடைந்தது. இந்த தீ விபத்தினால் அந்தப் பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்தனா்.

இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கு காரணம் என்ன என்று கண்டறிய விசாரணை செய்து வருகின்றனா்.

முன்னதாக தீ விபத்து குறித்து தகவலறிந்த சென்னை மாநகராட்சி மேயா் பிரியா, தீயணைப்புத்துறை இணை இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் அங்கு வந்து, பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT