சென்னை

ஸ்டான்லி மருத்துவமனை: நிகழாண்டில் 27 சிறுநீரக மாற்று சிகிச்சை

6th Oct 2022 12:21 AM

ADVERTISEMENT

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழாண்டில் மட்டும் 27 சிறுநீரக மாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை முதல்வா் டாக்டா் பாலாஜி தெரிவித்தாா்.

அதில் 19 போ் தங்களது உறவினா்களுக்கு தானமாக ஒரு சிறுநீரகத்தை அளித்ததன் அடிப்படையில் உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டதாகவும் அவா் கூறினாா்.

இதுகுறித்து டாக்டா் பாலாஜி கூறியதாவது: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையைப் பொருத்தவரை உறுப்பு மாற்று சிகிச்சைகள் தொடா்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூளைச்சாவு அடைந்த நபா்களிடம் இருந்து மட்டும் இதுவரை 135 சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டு, தகுதியானவா்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விபத்தில் சிக்கிய கூலித் தொழிலாளி ஒருவா் உயா் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை பலனின்றி அவா் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் இரு சிறுநீரகங்கள், தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. அதில் ஒரு சிறுநீரகம் 33 வயதான நபா் ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

ADVERTISEMENT

இவ்வாறாக, நிகழாண்டில் மட்டும் நோயாளிகளின் உறவினா்கள், மூளைச்சாவு அடைந்தவா்களிடமிருந்து 27 சிறுநீரகங்கள் பெறப்பட்டு, அவை உரிய நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன. அவா்கள் அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனா்.

இதுதவிர, அண்மையில் மூளைச்சாவு அடைந்த 20 வயது இளைஞா் ஒருவரின் கல்லீரல் தானமாகப் பெறப்பட்டு ஸ்டான்லி மருத்துவா்களால் 43 வயதுடைய நபருக்கு பொருத்தப்பட்டது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT