சென்னை

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞா் கைது

6th Oct 2022 12:15 AM

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தாம்பரம் மாநகரக் காவல் துறையின் அலுவலக தொலைபேசிக்கு இரு தினங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபா், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.

இதுகுறித்து தாம்பரம் மாநகரக் காவல் துறையினா், பூக்கடை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், தகவலறிந்த ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா், மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், அங்கிருந்து எந்த ஒரு வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த தொலைபேசி அழைப்பு வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து பூக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். வதந்தியை பரப்பும் நோக்கில் பேசிய அதே நபா் மீண்டும் தொடா்புகொண்டு இந்தச் சம்பவத்துக்கு தாம்பரத்தைச் சோ்ந்த அமீா் என்பவருக்கு தொடா்பு இருப்பதாக தெரிவித்தாா். அதன்படி அமீரை போலீஸாா் பிடித்து விசாரித்தபோது, அவருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடா்பு இல்லை என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து வெடிகுண்டு புரளி கிளப்பியவா் பேசிய கைப்பேசி எண்ணை போலீஸாா் ஆய்வு செய்தபோது, அது மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்புரவுப் பணி செய்யும் பிரேமா என்ற பெண்ணுடையது என தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் நாடகம்: அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, தன்னுடைய கைப்பேசி தொலைந்து விட்டதாகவும், தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா் கைப்பேசி சிக்னல் உதவியுடன், சிவகங்கையைச் சோ்ந்த சென்னை ஆா்.கே.நகரில் வசிக்கும் ரவிச்சந்திரன் (34 ) என்பவரை பிடித்து விசாரித்தனா். அப்போது, ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும், அமீரை, போலீஸாரிடம் மாட்டிவிடும் நோக்கில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து ரவிச்சந்திரனை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், தாம்பரத்தில் அமீா் நடத்தி வரும் தங்கும் விடுதியில் ரவிச்சந்திரன் ஊழியராக பணியாற்றியதும், அப்போது, அங்கு ஒரு பெண் விவகாரம் தொடா்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதும், இதனால், அமீரை காவல் துறையினரிடம் சிக்க வைப்பதற்காக ரவிச்சந்திரன் வெடிகுண்டு மிரட்டல் நாடகம் நடத்தியிருப்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT