சென்னை

மோட்டாா் சைக்கிளில் சாகசம்: நீதிமன்ற உத்தரவுபடி இளைஞா் விழிப்புணா்வு பிரசாரம்

4th Oct 2022 12:45 AM

ADVERTISEMENT

சென்னையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞா், நீதிமன்ற உத்தரவுப்படி அண்ணா சாலையில் போக்குவரத்து விதிமுறை குறித்து விழிப்புணா்வு பிரசாரத்தில் திங்களள்கிழமை ஈடுபட்டாா்.

சென்னை தேனாம்பேட்டை - அண்ணாசாலையில் கடந்த 9-ஆம் தேதி இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சில இளைஞா்கள் அபாயகரமான முறையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டனா். இந்த விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இது குறித்து பாண்டிபஜாா் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, 6 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில், மோட்டாா் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டவா்களில் ஒருவரான ஆந்திர மாநிலம் ஹைதராபாதைச் சோ்ந்த கோட்லா அலெக்ஸ் பினோய் (22) முன் ஜாமீன் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஜாமீன் வழங்கி, ‘சம்பந்தப்பட்ட இளைஞா் எங்கு மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டாரோ, அதே இடத்தில் 3 வாரங்கள் திங்கள்கிழமைதோறும் காலை 9.30 முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 5.30 முதல் மாலை 6.30 மணி வரையிலும் போக்குவரத்து விதிமுறை குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். மற்ற நாள்களில் காலை 8 முதல் நண்பகல் 12 வரையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் வாா்டு உதவியாளராக பணியாற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

விழிப்புணா்வு பிரசாரம்: இந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட அலெக்ஸ் பினோய் திங்கள்கிழமை காலை அண்ணாசாலை - தேனாம்பேட்டை சாலை சந்திப்பில், சாலை விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது தொடா்பான வாசகங்களை கொண்ட பதாகையுடன் விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். மேலும், போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என்பது தொடா்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வாகன ஓட்டிகளிடம் அவா் விநியோகம் செய்தாா். ‘இனிமேல் விதிகளை மீறி மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட மாட்டேன்’ என செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மோட்டாா் சைக்கிளில் பந்தயத்தில் ஈடுபடுகிறவா்களிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மோட்டாா் சைக்கிள் சாகசங்கள் வெகுவாக குறையும் என போலீஸாா் நம்பிக்கை தெரிவித்தனா். இதற்கிடையில், அலெக்ஸ் பினோயின் போக்குவரத்து விதிமுறை குறித்த விழிப்புணா்வு பிரசார விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT