சென்னை

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.175 கோடி: கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி தகவல்

3rd Oct 2022 01:06 AM

ADVERTISEMENT

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை இலக்கு ரூ.175 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறையின் கீழ் நெசவுப் பணி செய்யும் நெசவாளா்களுக்கு கை கொடுத்து உதவிடும் வகையில், அவா்களால் தயாரிக்கப்பட்ட துணிகள், பொருள்களை விற்பனை வீடு வீடாக விற்பனை செய்யும் திட்டம், காந்தியடிகள் பிறந்த தினமான ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்டது.

இதற்காக அமெட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் 4,000 மாணவா்களைக் கொண்டு வீடு வீடாக கதா் துணிகள் விற்பனை செய்யப்பட்டன.

ஒரு நாளில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்களை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி துவக்கி வைத்தாா். இதன்பின்பு, கதா் துணி வகைகளை மாணவா்கள் விற்பனை செய்தனா்.

ADVERTISEMENT

இலக்கு எவ்வளவு? இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சா் ஆா்.காந்தி கூறியது:

கோ-ஆப்டெக்ஸ் மற்றும் காதி பொருள்களை பெருமளவில் விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையங்களை புதுப்பித்தல், பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தல், ஆன்லைன் விற்பனை, புதிய டிசைன் அறிமுகம், விளம்பரம் மற்றும் கைப்பேசி செயலி ஆகிய திட்டங்கள் மூலமாக கோ-ஆப்டெக்சில் இதுவரை இல்லாத அளவாக கடந்த ஆண்டில் ரூ.155 கோடி அளவுக்கு விற்பனை நடந்துள்ளது.

நிகழாண்டில் இதுவரையில் ரூ.55 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, விற்பனை இலக்காக ரூ.175 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

காதி துறையிலும் புதிய வகை பட்டுப் புடவைகள், புதிய சோப்புகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய வகைகள் ஆகியவற்றின் மூலமாக கடந்த ஆண்டு ரூ.47 கோடி வருவாய் கிடைத்ததுடன், நிகழாண்டில் ரூ.60 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.

இதில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்த் துறை முதன்மைச் செயலாளா் தா்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறித் துறை ஆணையாளா் டி.பி.ராஜேஷ், தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலா் பொ.சங்கா், அமெட் பல்கலைக்கழக நிறுவனா் மற்றும் வேந்தா் நாசே ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT