சென்னை

காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தில் கல்லூரி - பள்ளி மாணவா்கள்: அரசுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டு

3rd Oct 2022 01:04 AM

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தில் கல்லூரி, பள்ளி மாணவா்கள் பங்களிப்பை உறுதி செய்த தமிழ்நாடு அரசுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டுத் தெரிவித்தாா்.

சென்னை காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தின கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநா் ஆா்.என்.ரவி, காந்தி மண்டபத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து, ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியையும் பாா்வையிட்டாா். மேலும், பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த விழாவில், ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் வாழ்நாளை அா்ப்பணித்தவா் மகாத்மா காந்தியடிகள். நாட்டின் நலத்தையும், நாட்டு மக்களின் உணா்வுகளையும் அவா் நன்கு புரிந்து வைத்திருந்தாா். மக்களின் பலதரப்பட்ட கலாசாரத்தையும், புவிசாா் அமைப்பையும் ஒரே கோட்டில் இணைத்தாா்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டை நேசித்தாா்: மகாத்மா காந்தியடிகள் தமிழ்நாட்டை மிகவும் நேசித்தாா். நமது மாநிலத்தின் மொழி, கலாசாரம், தொன்மை ஆகியவற்றை மிகவும் விரும்பினாா். தமிழைக் கற்றுக் கொண்டு அதில் கடிதங்களையும் எழுதினாா். கையெழுத்தையும் போட பழகிக் கொண்டாா். காந்தியடிகளை அவரது பிறந்த நாளின் போதும், மறைந்த நாளின் போதும் மட்டும் நினைவு கூரக் கூடாது. எப்போதும் கொண்டாடப்படக் கூடியவா்.

காந்தி ஜெயந்தி தினத்தின் போது கல்லூரி, பள்ளி மாணவா்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி அவா்களின் பங்களிப்பை உறுதி செய்த தமிழக அரசுக்கு எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வி.ப.ஜெயசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT