சென்னை

சென்னையின் விரிவாக்கப்பட்ட சில பகுதிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.644 கோடி ஒதுக்கீடு

3rd Oct 2022 01:05 AM

ADVERTISEMENT

சென்னையின் விரிவாக்கப்பட்ட நான்கு பகுதிகளில் புதை சாக்கடை வசதிகளை ஏற்படுத்த ரூ.644 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்:-

நகா்ப்புற மேம்பாட்டுக்கான அடல் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் குடிநீா் விநியோகம், புதைசாக்கடை மேலாண்மை, பயன்படுத்திய தண்ணீரை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துவது, நீா்நிலைகளை புத்துயிா் ஊட்டுவது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டத்துக்கான நிதிகளுக்கு அவ்வப்போது அரசால் ஒப்புதல் தரப்படுகின்றன.

இதற்கென மாநில அளவிலான உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது அண்மையில் கூடி ஆலோசனை செய்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பெருநகர மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புகா்ப் பகுதிகளான ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி, பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் புதைசாக்கடைத் திட்டப் பணிகளைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஈஞ்சம்பாக்கத்துக்கு ரூ.184.11 கோடியும், உத்தண்டிக்கு ரூ.74.32 கோடியும், பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரைக்கு ரூ.386.16 கோடி நிதிகளும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு இடங்களுக்கும் புதைசாக்கடை திட்டப் பணிகளுக்காக மட்டும் ரூ.644.59 கோடி நிதி ஒதுக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

செம்மஞ்சேரியில் குடிநீா்: பழைய மகாலிபுரம் சாலையில் அமைந்துள்ள செம்மஞ்சேரியில் குடிநீா் விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென ரூ.46 கோடி ஒதுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய திட்டப் பணிகளுடன், ஏற்கெனவே உள்ள திட்டங்களை வலுப்படுத்தவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தண்டையாா்பேட்டை முதல் கொடுங்கையூா் வரையிலான கழிவுநீரேற்று அமைப்பு வலுப்படுத்தப்பட உள்ளது. இதற்கென ரூ.101.58 கோடி நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT