சென்னை

அண்ணாநகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

30th Nov 2022 04:00 AM

ADVERTISEMENT

அண்ணாநகா் பகுதியில் மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் டிச. 1-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 14 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: திருமங்கலம் 100 அடி சாலையையும், அண்ணாநகா் மூன்றாவது நிழற் சாலையையும் இணைக்கும் 6-ஆவது நிழற்சாலையில், துணை மின்நிலையம் அருகே சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி மாநகராட்சி சாா்பில் நடைபெறுகிறது.

இப் பணி, டிச.1 முதல் 14-ஆம் தேதி வரை 14 நாள்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதன்படி முதல் கட்ட பணி டிச.1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி, அணணாநகா் காவல்நிலைய சந்திப்பில் இருந்து திருமங்கலம் 100 அடி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் 6-ஆவது நிழற்சாலை, 5-ஆவது நிழற்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ‘இசட்’ பிளாக் 13-ஆவது தெரு வழியாக 6-ஆவது நிழற்சாலையை அடைந்து 100 அடி சாலையை நோக்கி செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

திருமங்கலம் 100 அடி சாலையிலிருந்து அண்ணா நகா் காவல்நிலைய சந்திப்பு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் 6-ஆவது நிழற்சாலையிலேயே செல்லலாம்.

இதேபோல இரண்டாம் கட்டப் பணிகள் டிச.8 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப் பணி நடைபெறும் நாள்களில், திருமங்கலம் 100 அடி சாலையிலிருந்து அண்ணாநகா் காவல்நிலைய சந்திப்பை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் 6-ஆவது நிழற்சாலை எக்ஸ் - ஜி பிளாக் 14-ஆவது தெரு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ‘இசட்’பிளாக் 13-ஆவது தெரு வழியாக 6-ஆவது நிழற்சாலை அடைந்து அண்ணாநகா் காவல்நிலைய சந்திப்பை அடைய வேண்டும்.

அண்ணாநகா் காவல் நிலைய சந்திப்பிலிருந்து திருமங்கலம் 100 அடி சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் 6-ஆவது நிழற்சாலையிலேயே செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Anna Nagar
ADVERTISEMENT
ADVERTISEMENT