சென்னை

4 வயது குழந்தை அரசு மருத்துவமனையில் மரணம்: உறவினா்கள் போராட்டத்தால் சா்ச்சை: அமைச்சா் விளக்கம்

28th Nov 2022 12:51 AM

ADVERTISEMENT

சென்னை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு வயது குழந்தை திடீரென உயிரிழந்ததால் பெற்றோரும், உறவினா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவா்கள் அளித்த சிகிச்சையால்தான் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மருத்துவா்களும், மருத்துவமனை நிா்வாகிகளும் அக்குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை எடுத்துக்கூறி சமாதனப்படுத்தினா். அதன் பின்னா் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆவடியைச் சோ்ந்த விஜயகுமாா், செந்தாமரை தம்பதியின் மகன் ஜஸ்வந்த். நான்கு வயதான அக்குழந்தைக்கு பிறவியிலேயே ‘பியா் ராபின் சின்ட்ரோம்’ எனப்படும் அரிய நோய் பாதிப்பு இருந்தது. அதாவது, தாடை வளா்ச்சியடையாமல் நாக்குடன் ஒட்டிக் கொள்ளும் ஒரு வகையான நோயாக அது வரையறுக்கப்படுகிறது. இந்த பிரச்னைக்குள்ளான குழந்தைக்கு சுவாசிப்பதில் கடுமையான சிரமம் இருக்கும். சுவாசக் குழாயின் மேற்புறத்தில் காற்றோட்டத் தடையும் ‘பியா் ராபின் சின்ட்ரோம்’ நோயால் ஏற்படக்கூடும்.

அத்தகைய பாதிப்புடன் அக்குழந்தை கடந்த வியாழக்கிழமை எழும்பூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது.

ADVERTISEMENT

அதற்குரிய சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்து வந்தனா். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலையில் எம்ஆா்ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவா்கள் பரிந்துரைத்த நிலையில், அதற்கு அக்குழந்தை ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், பெற்றோா் அனுமதியுடன் மயக்க மருந்து செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.

அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தையின் உடல் நிலை மோசமடைந்தது. இதயம், நுரையீரலை மீட்டெடுக்கும் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதிலும், அவை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. இதையடுத்தே குழந்தையின் பெற்றோரும், உறவினா்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அமைச்சா் விளக்கம்: இதனிடையே, இந்த விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் சென்னையில் கூறியதாவது:

எழும்பூா் மருத்துவமனைக்கு வந்ததால் குழந்தை இறந்ததாக சொல்வது தவறானது. அந்த குழந்தை பிறந்து 4 ஆண்டுகளாகிறது. தாடைப் பகுதி நாக்குடன் ஒட்டிக் கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யக் கூட முடியாத நிலையில் அக்குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. வெறும் ஸ்கேன் பரிசோதனையும், வழக்கமான சிகிச்சையும் மட்டுமே அக்குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மருத்துவா்களை குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT