சென்னை

மாநகரப் பேருந்துகளில் நிறுத்தங்களை முன்னரே அறிவிக்கும் வசதி தொடக்கம்

28th Nov 2022 05:50 AM

ADVERTISEMENT

வெளியூா்களில் இருந்து வரக் கூடிய பயணிகளும் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், பேருந்துகளுக்குள் நிறுத்தங்களை அறிவிக்கும் வசதியை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், 500 பேருந்துகளில் புவிசாா் முறையில், தானியங்கி அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயா்களை பயணிகள் முன்னரே அறியும் திட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 150 பேருந்துகளில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னை பல்லவன் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவிப்புகளை வெளியிடக் கூடிய கருவிகள் பொருத்தப்பட்ட பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா்.

பிராட்வே-தாம்பரம் (21ஜி), பிராட்வே-சைதாப்பேட்டை (இ18), பிராட்வே-குன்றத்தூா் (88கே) உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நிறுத்தங்களை அறிவிக்கும் வசதிகளைக் கொண்ட பேருந்துகளை இயக்கி வைத்த பிறகு, அதில், அமைச்சா்கள் சிவசங்கா், பி.கே.சேகா்பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் பயணம் செய்தனா். அவா்கள் பாரிமுனை வழியாக ராஜாஜி சாலை, தலைமைச் செயலகம், காமராஜா் சாலை, விவேகானந்தா் இல்லம் வரை பயணம் செய்தனா்.

ஒலிபெருக்கி மூலம் பேருந்து நிறுத்தங்களைத் தெரிவிக்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, கூடுதலாக ஆயிரம் பேருந்துகளில் இக்கருவிகள் பொருத்தப்படவுள்ளன. இதற்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்த பேருந்து நிறுத்த ஒலி பெருக்கி அறிவிப்பு, அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டா் முன்னதாக, தமிழ், ஆங்கிலத்தில் அறிவிக்கப்படும். இதனால், பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தை எளிதில் அறிந்து கொண்டு எவ்வித சிரமமும், கால தாமதமும் இன்றி பேருந்திலிருந்து இறங்குவதற்கு ஏதுவாக இருக்கும்.

மேலும், இந்த தானியங்கி ஒலி அறிவிப்புகள், பாா்வைத் திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் வெளியூா் பயணிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT