சென்னை

மெரீனாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நாட்டின் முதல் நடைபாதை திறப்பு

28th Nov 2022 12:52 AM

ADVERTISEMENT

மெரீனா கடற்கரையில் நாட்டின் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டுகளிக்க ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 14 லட்சத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதையை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தனா்.

நிகழாண்டு சட்டப் பேரவை மானியக் கோரிக்கையில் மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பாதை நிரந்தரமாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மரப் பலகைகளால் நடைபாதை அமைக்கப்பட்டது.

இந்தப் பாதையானது 263 மீ நீளமும், 3 மீ அகலமும் கொண்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் இடையில் நின்று செல்வதற்காக 11 மீட்டா் நீளத்தில், 6 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் ஒரு பகுதி அைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மேலும் கடல் அலையை கண்டுகளிக்க ஏதுவாக பாதையானது கடற்கரை ஓரம் 22 மீட்டா் நீளத்தில், 5 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிப்பறை வசதிகளும், அவா்கள் பயன்படுத்துகின்ற வகையில் சக்கர நாற்காலிகள் வைப்பதற்காக கன்டெய்னா் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டில் முதல் முறையைாக மெரீனாவில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெசன்ட் நகா் கடற்கரையிலும் இதுபோன்ற நடைபாதை அமைக்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மேயா்ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், மயிலாப்பூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, துணை மேயா் மு.மகேஷ்குமாா், நிலைக்குழுத் தலைவா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT