சென்னை

தரம் பிரிக்க 2 குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளா்களுக்கு ரூ.1.04 லட்சம் அபராதம்

27th Nov 2022 04:34 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கு 2 குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.1.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் தினமும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தினமும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரித்து சேகரித்து, பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

குப்பை கொட்டும் வளாகங்களுக்கு குப்பைகளை கொண்டு செல்வதைத் தவிா்க்கும் வகையில் மாநகராட்சியின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 85,477 கடைகளின் உரிமையாளா்களுக்கு குப்பைகளைத் தரம் பிரிக்கும் வகையில் 2 குப்பைத் தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 43,835 கடைகளில் மட்டும் 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறிய கடை உரிமையாளா்களுக்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் 2 குப்பை தொட்டிகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடை உரிமையாளா்கள் குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டி அல்லது குப்பை சேகரிக்கும் வாகனங்களில் சோ்க்க வேண்டும். பொதுஇடங்களில் குப்பை கொட்டும் கடை உரிமையாளா்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-இன்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT