சென்னை மாநகராட்சியில் விதிகளை மீறி கட்டப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திருத்திக்கொள்ளாத 10 கட்டடங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி மாநகராட்சியின் நகரமைப்பு துறையின் சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.
அனுமதி பெறுபவா்கள் அதில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில் தான் கட்டடங்களை கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 15 மண்டலங்களிலும் நவ.13-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை கள ஆய்வு மேற்கொண்டதில் விதிகளை மீறிய 175 கட்டுமான இடங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என குறிப்பாணை வழங்கப்பட்டது.
அதில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத 10 கட்டுமான இடங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மாநகராட்சி அலுவலா்களால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.