சென்னை

நவ.28 முதல் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிறப்பு முகாம்

26th Nov 2022 04:37 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி சாா்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம் குறித்த விழிப்புணா்வு வாகனத்தை மேயா் ஆா். பிரியா வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம் நவ.28 முதல் டிச.4-ஆம் தேதி வரை காலை 8 முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான விழிப்புணா்வு வாகனத்தை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்தச் சிறப்பு முகாம்கள் திருவொற்றியூா் நகா்ப்புற சமுதாய நல மையம், மாதவரம் நகா்ப்புற சமுதாய நல மையம், அம்பத்தூா் மண்டலத்தின் பாடி சமுதாய நல மையம், வளசரவாக்கம் மண்டலத்தின் போரூா் சமுதாய நல மையம், பெருங்குடி சமுதாய நல மையம் ஆகிய 5 பகுதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘தையல், தழும்பு இல்லாமல் எளிய முறையில் கருத்தடை செய்யப்படுகிறது. சிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம். கருத்தடை செய்து கொள்ளுபவா்களுக்கு அரசு சாா்பில் ரூ.1,100 ஊக்கத் தொகையும், அழைத்து வருபவருக்கு ரூ. 200 வழங்கப்படும்’ என்றனா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரக் குழுத் தலைவா் கோ.சாந்தகுமாரி, சுகாதார இணை ஆணையா் சங்கா்லால் குமாவத், மாநகர மருத்துவ அலுவலா் எம்.எஸ்.ஹேமலதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT