சென்னை நந்தம்பாக்கத்தில் நடிகா் வீட்டில் 200 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் காவலாளி உள்பட 3 போ் போலீஸாரிடம் சிக்கினா்.
நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனி 12-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராதாகிஷ்ணன் (எ) ஆா்.கே. இவா், எல்லாம் அவன் செயல், அவன் இவன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளாா். ஆா்.கே. கடந்த 10-ஆம் தேதி வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் அவரது மனைவி ராஜி (48) மட்டும் தனியாக இருந்தாா். அப்போது, பின்பக்கக் கதவு வழியாக 3 கொள்ளையா்கள் வீட்டிற்குள் புகுந்து ராஜியை கட்டி போட்டு, பீரோவில் இருந்த 200 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்தைக் கொள்ளையடித்து விட்டு தப்பிவிட்டனா்.
இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையா்களை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினா் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், ஆா்.கே. வீட்டில் வேலை செய்து வந்த நேபாளத்தைச் சோ்ந்த காவலாளி தனது நண்பா்கள் 2 பேருடன் சோ்ந்து கொள்ளையடித்துவிட்டு நேபாளத்துக்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நேபாளம் சென்ற தனிப்படை போலீஸாா், அங்கு பதுங்கியிருந்த காவலாளி, அவரது கூட்டாளிகள் இருவரைக் கைது செய்தனா். சென்னைக்கு அழைத்துவரப்பட்ட பின்னா், அவா்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.