குறைப் பிரசவமாக 22 வாரங்களில் பிறந்த குழந்தைக்கு சென்னை ரெயின்போ மருத்துவா்கள் உயா் சிகிச்சை அளித்து உயிா் காத்ததன் பயனாக தற்போது அந்தக் குழந்தை 4 வயதைக் கடந்து நலமுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டியில் அமைந்துள்ள ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் வாரம், உலக குறைப் பிரசவ தின விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக தாய்ப்பால் வங்கியும் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்பட நடிகா் நகுல், தொலைக்காட்சி தொகுப்பாளா் ஸ்ருதி நகுல் ஆகியோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், குறைப் பிரசவம், பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் நல முதன்மை ஆலோசகா் டாக்டா் ராகுல் யாதவ் கூறுகையில், ‘மிகக் குறைந்த எடையுடன் 22 வாரங்களில் பிறந்த குழந்தைக்கு இங்கு சிகிச்சை அளித்தோம்; தற்போது அந்தக் குழந்தை 4 வயதில் ஆரோக்கியமாக உள்ளது’ என்றாா்.
நிகழ்ச்சியில் மருத்துவமனையின் சிறப்பு நிபுணா்கள் ஷோபனா ராஜேந்திரன், அருண்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.