அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை நடவடிக்கைகளைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் தணிக்கைக் குழு அமைக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி (புதன்கிழமை)சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெறவுள்ள அக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், மருத்துவக் கல்வி இயக்குநா் (பொ) டாக்டா் சாந்திமலா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
இதில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் பொது அறுவை சிகிச்சைத் துறை தலைவா்கள் மற்றும் துறைசாா் நிபுணா்கள் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவிக்கவுள்ளனா்.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்த விவகாரம் பல்வேறு அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மகப்பேறு மரணங்கள், சிசு மரணங்கள் தொடா்பாக ஆய்வு செய்து தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில், அறுவை சிகிச்சை நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக குழுக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதுகுறித்து ஆலோசிக்கும் வகையில் அறுவை சிகிச்சை மருத்துவா்களுடனான ஆலோசனைக்கூட்டம் வரும் 23-ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற உள்ளது. பிரியா மரணத்தைப் போன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நிகழாமல் தடுப்பதற்கான முயற்சியாக இது இருக்கும் என்றாா் அவா்.