மூளைச்சாவு அடைந்த மதுரையைச் சோ்ந்த இளைஞரின் இதயத்தை தானமாகப் பெற்று சென்னையில் விவசாயி ஒருவருக்கு பொருத்தி ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:
மதுரையைச் சோ்ந்த 27 வயது இளைஞா் ஒருவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது இதயத்தை குடும்பத்தினா் தானமாக அளிக்க முன்வந்தனா். உறுப்பு தான பதிவு மூப்பின் அடிப்படையில் தானமாகப் பெறப்பட்ட அவரது இதயம் ரேலா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
அதன்பேரில், ரேலா மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள் மோகன், பிரேம் ஆகியோா் தலைமையிலான 6 போ் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை (நவ.17) காலை மதுரைக்கு சென்று சம்பந்தப்பட்ட இளைஞரின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக எடுத்தனா். அதை 1 மணி நேரம் 10 நிமிடங்களில் மதுரையிலிருந்து விமானம் மூலமாகவும், பசுமை வழித் தடம் மூலமாகவும் ரேலா மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனா்.
ரேலா மருத்துவமனையில் இதயத் தசை செயலிழப்பு பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 36 வயதான விவசாயிக்கு துரிதமாக அந்த இதயத்தைப் பொருத்தினா். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் தற்போது அந்த விவசாயி மறுவாழ்வு பெற்றுள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.