ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ. 946.92 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆவது கட்டத்தின் கீழ் ஓட்டுநா் இல்லாமல், இயக்கப்படும் 3 பெட்டிகள் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 946 கோடியே 92 லட்சம் மதிப்பில் பணி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.ஏ.சித்திக் முன்னிலையில் அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனத்தின் வா்த்தக இயக்குநா் ராஜீவ் ஜோய்சருடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் (அமைப்புகள், இயக்ககம்) ராஜேஷ் சதுா்வேதி பகிா்ந்து கொண்டாா்.
இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரயில் 2024-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் 2024-ஆம் ஆண்டு நவம்பா் முதல் 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா (நிதி), தலைமைப் பொது மேலாளா் ஏ.ஆா்.ராஜேந்திரன் (தொடா்வண்டி, இயக்கம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.