சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 49 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவின் பேரில், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், கொலை முயற்சி உள்பட குற்ற வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு தணிக்கை, சிறப்பு வாகன தணிக்கைகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இதில், 698 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை நேரில் சந்தித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், 34 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டது. சட்டம் - ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக 10 போ் கைது செய்யப்பட்டனா்.
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த 6 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.
ஏற்கெனவே 467 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனா். சிறப்பு வாகன தணிக்கையில் 4,562 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், மது போதையில் வாகனம் ஓட்டுதல் உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பழைய குற்றவாளிகளை அடையாளம் காணும் முக அடையாளம் காணும் கேமரா மூலம் 3,013 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.